கலைத் தமிழ் வலைப்பூவுக்கு வருகை தந்தமைக்கு நன்றி! -மதுராப்புர கலைமகன் பைரூஸ்

திங்கள், 21 செப்டம்பர், 2009ஈழத்து இலக்கியத்தில் மின்னிப்பிரகாசிக்கும் எழுத்தாளர்


கலாபூஷணம் புன்னியாமீன்

இலங்கையின் மத்திய மலைநாட்டின் தலைநகர் கண்டி மாநகருக்கு அருகேயுள்ள கட்டுகஸ்தோட்டை எனும் பிரதேசத்தைப் பிறப்பிடமாகக் கொண்ட பீர்மொஹம்மட் புன்னியாமீன் அவர்கள் மூத்த எழுத்தாளரும், பன்னூலாசிரியரும், வெளியீட்டாளரும், ஊடகவியலாளருமாவார். பழகுவதற்கு இனிய சுபவாம் கொண்ட இவர், கர்வமின்றி சாதாரண வாழ்க்கை வாழ்பவர். சமூக உணர்வுமிக்கவர். தனது சமூகத்துக்காகவும்ää ஒடுக்கப்பட்ட மக்களுக்காகவும் என்றும் எழுத்தின் மூலம் குரல்கொடுத்து வருகின்றவர்.

1960ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 11ஆம் திகதி பீர்மொஹம்மட், சைதா உம்மா தம்பதியினரின் புதல்வராகப் பிறந்த புன்னியாமீன் /ஜாமியுல் அஸ்ஹர் மத்திய கல்லூரி, / மடவளை மதீனா தேசிய கல்லூரி ஆகியவற்றின் பழைய மாணவராவார். பேராதனைப் பல்கலைக்கழக கலைமாணிப் பட்டதாரியான இவர், ஊடகவியல் துறையில் டிப்ளோமா பட்டத்தினையும் பெற்றுள்ளார்.

தொழில் ரீதியாக 1983ஆம் ஆண்டில் ஆசிரியர் சேவையில் இணைந்த புன்னியாமீன், பின்பு கல்லூரி முதல்வராகவும், மத்திய மாகாண சபையின் கல்வி, கலாசார அமைச்சின் இணைப்பதிகாரியாகவும், மத்திய மாகாண கலாசார அமைச்சின் உதவிப் பணிப்பாளராகவும் சேவையாற்றி 2004ஆம் ஆண்டில் சுயவிருப்பின் பேரில் ஓய்வுபெற்றார். தற்போது வரையறுக்கப்பட்டசிந்தனைவட்டம்தனியார் கம்பனியின் முகாமைத்துவப் பணிப்பாளராகக் கடமையாற்றிக் கொண்டு முழுநேர ஊடகவியலாளராகவும், தமிழ் இலக்கிய ஆய்வாளராகவும் செயலாற்றிக் கொண்டிருக்கின்றார்.

1999ஆம் ஆண்டில் இவர் இலங்கையில் மத்திய மாகாண கலாசார அமைச்சின் உதவிப் பணிப்பாளராக பணியாற்றிக் கொண்டிருந்த காலகட்டங்களில் மத்திய மாகாணத்தில் முஸ்லிம் சாகித்திய விழாவொன்றினை மிகவும் திறன்பட நடத்தி முடித்ததுடன், அவ்விழாவில் 15 முஸ்லிம்களையும், 3 தமிழர்களையும், 2 சிங்களவர்களையும் கௌரவிக்க ஏற்பாடு செய்திருந்தார். 1987ஆம் ஆண்டு மாகாண சபை முறை இலங்கையில் அறிமுகம் செய்யப்பட்டதையடுத்து மாகாண மட்டத்தில் முஸ்லிம் சாகித்திய கலாசார விழாவொன்று நடைபெற்றமை இதுவரை முதலும் கடைசியும் இதுவேயாகும்.

இலக்கிய ஆர்வம் இவருக்கு இயல்பாகவே ஏற்பட்டது. இவர் பாடசாலையில் கற்கும் காலங்களில் (1973/1974) ‘இளங்கதிர்’, ‘இளங்காற்று’, ‘இளந்தென்றல்ஆகிய கையெழுத்துச் சஞ்சிகைகளின் ஆசிரியராக நின்று வெளியிட்டுள்ளார். தொடர்ந்து வாசிப்புத்துறையில் ஆர்வம் காட்டி வந்த இவரின் சுய ஆக்கமான முதல் உருவகக் கதைஅரியணை ஏறிய அரச மரம்எனும் தலைப்பில் 1978 ஜுலை 02ஆம் திகதி தினகரன் வாரமஞ்சரியில் பிரசுரமானது. அதேநேரம், இவர் ஒரு நாடக நடிகரும்கூட. பாடசாலையில் கற்கும்போது இவரால் நடிக்கப்பட்ட நாடகங்கள் பல பரிசில்களை வென்றுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

160க்கும் மேற்பட்ட சிறுகதைகளையும், 1000க்கும் மேற்பட்ட சமூக, இலக்கிய, அரசியல், திறனாய்வு, கல்விசார் கட்டுரைகளையும் எழுதியுள்ளார். இத்தகைய இவரின் ஆக்கங்கள் இலங்கையின் தேசிய பத்திரிகைகள், சஞ்சிகைகளிலும், இந்தியாவில்கலைமகள்’, ‘தீபம்’, ‘தாமரைஉட்பட புலம்பெயர் நாட்டு இலக்கிய ஏடுகளிலும் பிரசுரமாகியுள்ளன. இலங்கை வானொலியிலும் ஒலிபரப்பாகியுள்ளன.

இவரின் முதலாவது சிறுகதைத் தொகுதிதேவைகள்எனும் தலைப்பில் 1979.11.11ஆம் திகதி கட்டுகஸ்தோட்டைஇஸ்லாமிய சேமநல சங்கம்எனும் சமூக சேவையமைப்பு வெளியிட்டது. இச்சிறுகதைத் தொகுதி இவரின் 19வது வயதில் வெளிவந்தது. இத்தொகுதியில் 14 சிறுகதைகள் இடம்பெற்றிருந்தன. அதைத் தொடர்ந்து புன்னியாமீன்

இதுவரை 150 நூல்களை தமிழ்மொழி மூலம் எழுதி வெளியிட்டுள்ளார். இலங்கையில் தமிழ்மொழி மூலம் ஆகக் கூடுதலான நூல்களை எழுதியுள்ளவர் இவரென கருதப்படுகின்றது.

இவரால் எழுதப்பட்ட 150 நூல்களுள் 07 சிறுகதைத் தொகுதிகள் அடங்கும். அவைதேவைகள்’, ‘நிழலின் அருமை’, ‘கரு’, ‘நெருடல்கள்’, ‘அந்தநிலை’, ‘யாரோ எவரோ எம்மை ஆள’, ‘இனி இதற்குப் பிறகுஎன்பனவாகும். இவரின் இரண்டாவது சிறுகதைத் தொகுதியானநிழலின் அருமை’ 1982 – 1986ஆம் ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலகட்டத்தில் இலங்கையின் முஸ்லிம் எழுத்தாளர்களால் எழுதப்பட்ட சிறுகதைத் தொகுதிகளுள் சிறந்ததொன்றாக முஸ்லிம் சமய, கலாசார அமைச்சினால் தேர்ந்தெடுக்கப்பட்டு விருதும், பணமுடிச்சும் வழங்கப்பட்டது. புன்னியாமீனின் சிறுகதைகளில் தான் வாழும் சமூகத்தின் பிரச்சினைகளை கருப் பொருளாகக் கொண்டிருப்பதை அவதானிக்க முடிகின்றது. தனது சமூகத்தின் அரசியல் பிரச்சினைகள், சமூகப் பிரச்சினைகள், மூட நம்பிக்கைகள், இன்றைய காலகட்டத்தில் இலங்கையில் அவசியமாகத் தேவைப்படும் இன நல்லுறவுகள் ஆகியன முக்கியம் பெறுவதையும் காணமுடிகின்றது. அதேநேரம், இவரின் சிறுகதைகளில் ஆற்றொழுக்கான எழுத்து நடையும், மென்மையான இலகு முறையில்; கதையை நகர்த்திச் செல்லும் பாணியும் தனித்துவமாக அமைந்து காணப்படும்.

புன்னியாமீன் இதுவரைஅடிவானத்து ஒளிர்வுகள்எனும் ஒரேயொரு நாவலை மாத்திரமே எழுதியுள்ளார். 1983ஆம் ஆண்டு எழுதப்பட்ட இந்த நாவல் 1987ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் தென்னிந்தியாவில்அல்-பாஸி பப்ளிகேஷன்வெளியீடாக வெளிவந்தது. பின்பு இதன் 2ம் பதிப்பு சிந்தனைவட்ட வெளியீடாக 2003ஆம் ஆண்டு ஜுலை மாதம் வெளிவந்தது. இலங்கை முஸ்லிம்களுக்கு தனியானதோர் அரசியல் கட்சி அவசியம் என்பதை இந்நூலினூடாக புன்னியாமீன் வலியுறுத்தியிருந்ததுடன், இலங்கையில் மாகாண அதிகாரப் பரவலாக்கம் பற்றிய வியூகங்களை அடிப்படையாகக் கொண்டு இந்நூலினை எழுதியிருந்தார். இலங்கை அரசியல் பிரச்சினைகளை மையமாகக் கொண்டு எழுதப்பட்ட முதல் நாவலாக இது கருதப்படுகின்றது.

2002ஆம் ஆண்டு இலங்கையில் நடைபெற்ற உலக இஸ்லாமிய தமிழ் இலக்கிய மாநாட்டு ஆய்வரங்கக் கோவையில் தென்னிந்தியாவைச் சேர்ந்த பேராசிரியர் மு. அப்துல்சமதுஅடிவானத்து ஒளிர்வுகள்நாவலைப் பற்றியும், ‘இஸ்லாமிய சமூகம் பின்புல நாவல்களில் சமூக முரண்பாடுகள்எனும் ஆய்வுக் கட்டுரையில் விரிவாக ஆராய்ந்துள்ளார். அதேநேரம், 2008ஆம் ஆண்டு பேராதனைப் பல்கலைக்கழகத் தமிழ்த்துறை சிறப்பு கற்கையில் மேற்கொள்ளும் ஒரு மாணவியும்அடிவானத்து ஒளிர்வுகள்தனது ஆய்வுக் கருப்பொருளாக எடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

தனது ஆரம்ப காலகட்டங்களில் படைப்பிலக்கியத்துறையில் அதிக ஆர்வமும், ஈடுபாடும் காட்டிவந்த புன்னியாமீன், 1990களில் இறுதிப் பகுதியில் படைப்பிலக்கியத் துறையிலிருந்து ஒதுங்கியிருப்பது குறிப்பிடத்தக்கதாகும். 1996ஆம் ஆண்டின் பின்பு படைப்பிலக்கியத்துறையிலிருந்து இவர் விலகி ஆய்வு அடிப்படையிலான நூற்றுக்கணக்கான கட்டுரைகளையும், குறிப்பிடத்தக்க புத்தகங்களையும் எழுதியிருப்பது அவதானிக்கத்தக்கதாகும். 1994ஆம் ஆண்டிலிருந்து அரசியல் ரீதியான பல ஆய்வுக் கட்டுரைகளை இவர் எழுதியுள்ளார். அரசியலை மையமாகக் கொண்டு 1994 ஆகஸ்ட் மாதம் இவர் எழுதியஇலங்கையின் தேர்தல்கள் (அன்றும், இன்றும்)’, இதேயாண்டில் இவர் எழுதிய ‘94 பொதுத் தேர்தலும் சிறுபான்மையினங்களும்’, ‘94 ஜனாபதித் தேர்தலும் சிறுபான்மையினங்களும்ஆகிய நூல்கள் பல்கலைக்கழக மட்டத்திலும், இலங்கை அரசியல் மட்டத்திலும் அதிகமாகப் பேசப்பட்டன. இதைத் தொடர்ந்து 2000 ஜனவரியில் ‘21ஆம் நூற்றாண்டில் இலங்கைத் தலைமைத்துவம்’, 2000 நவம்பரில் ‘2000 பாராளுமன்றத் தேர்தலும் சிறுபான்மை சமூகத்தினரும்’, 2002 ஜனவரியில்சிறுபான்மை பிரதிநிதித்துவ விகிதாசாரம் பேணும் 12வது பாராளுமன்றம்’, 2002 ஜுனில்மத்திய மாகாண சபையில் முஸ்லிம் அமைச்சுப் பதவிக்கு சாவுமணிஆகிய அரசியல் நூல்கள் இலங்கையின் சிறுபான்மை சமூகங்களின் அரசியல் நிலைப்பாடுகளையும், எதிர்காலங்களையும் தெளிவுபடுத்துவதாக அமைந்துள்ளன. இந்த அரசியல் நூல்களில் பல மறு பதிப்பாக வெளிவந்தும் உள்ளன. இவற்றுக்கும் மேலதிகமாக அரசறிவியல் தொடர்பாகவும் குறிப்பாக உயர்தரம், பல்கலைக்கழக பட்டப்படிப்பு மாணவர்களுக்காக வேண்டி 14 அரசறிவியல் நூல்களை எழுதியுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

இதேபோல பொது அறிவு சார்ந்த அடிப்படையிலும் புன்னியாமீன் இதுவரை 8 நூல்களை வெளியிட்டுள்ளார். இலங்கையில் தொழில் வாய்ப்புகளுக்காக வேண்டி நடாத்தப்படும் போட்டிப் பரீட்சைகள், நிர்வாக சேவை, கடல் கடந்த நிர்வாக சேவை, கல்விச் சேவை தெரிவுக்கான போட்டிப் பரீட்சைகள் ஆகியவற்றைக் கருத்திற் கொண்டு இந்த பொது அறிவு நூல்கள் அமைந்துள்ளதை காணமுடிகின்றது.

புன்னியாமீனின் 100வது நூலானபுலம்பெயர்ந்த ஈழத்து எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்கள், கலைஞர்கள் விபரத்திரட்டுபாகம் 01’ எனும் நூல் ஜெர்மனியில் டியுஸ்-பேக் நகரில் ஜேர்மன் தமிழ் எழுத்தாளர் சங்கத்தினால் வெளியிடப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது. இவரின் 150வது நூலானஇவர்கள் நம்மவர்கள் பாகம் - 4’ 2008 டிசம்பர் 28ஆந் திகதி இலங்கையில் வெளியிடப்பட்டது.

இலங்கையைப் பொறுத்தமட்டில் 19ஆம் நூற்றாண்டுக் காலப்பகுதியிலிருந்து
இலங்கையில் தமிழ்மொழிவளர்ச்சிக்காக வேண்டியும், தமிழ்மொழியினூடாக சமய,
கலாசார, தேசிய உணர்வுகளை ஏற்படுத்தக்கூடிய வகையிலும் ஆயிரக்கணக்கான
எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்கள், கலைஞர்கள் தமது பங்களிப்புக்களை நல்கி
வந்துள்ளனர். ஆனால், இன்றுள்ள தலைமுறையினருக்கும், நாளைய
தலைமுறையினருக்கும் அவர்கள் யார்? என்ன செய்தார்கள்? அவர்களின் பணிகள்
எத்தகையவை என்ற விபரங்கள் தெரியாமல் இருக்கின்றது. பல்கலைக்கழக மற்றும்
உயர்மட்ட ஆய்வுகளில் கூட, இத்தகைய தகவல்களைப் பெற முடியாதிருப்பது
வேதனைக்குரிய ஒரு விடயமாகும். இதற்கான காரணம், இவர்கள் பற்றிய தரவுகள்,
விபரங்கள், குறிப்புகள் இன்மையே.

இது பற்றி ஆய்வுகள் மேற்கொள்ளப்பட வேண்டுமெனவும், அவை பதிவு செய்யப்பட்டு ஆவணப்படுத்தப்பட வேண்டுமெனவும் நீண்ட காலமாக பலரும் கூறிவந்தாலும்கூட, தொடர்ச்சியாக அம்முயற்சிகளில் யாரும் ஈடுபடவில்லை. முயற்சிகளை மேற்கொண்டவர்களும் குறிப்பிட்ட சிலரின் விபரங்களைத் திரட்டி ஆவணப்படுத்தியதுடன், அவற்றைத் தொடரவில்லை. இந்நிலையில் புன்னியாமீன் 2002ஆம் ஆண்டிலிருந்து இலங்கையில் எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்கள். கலைஞர்களின் விபரங்களைத் திரட்டி அவற்றை முதல் கட்டமாக தேசிய பத்திரிகையொன்றில் பிரசுரித்து பின்பு நூலுருப்படுத்தி இணையத்தளத்தில் பதிக்கும் நடவடிக்கையை மேற்கொண்டு வருகின்றார். 2008 டிசம்பர் வரை இலங்கையைச் சேர்ந்த 325 எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்கள், கலைஞர்களின் விபரங்களைத் திரட்டி 14 தொகுதி நூல்களாக இவர் வெளியிட்டுள்ளார். அத்துடன், நூலகம் டொட் நெட் இணையத்தளத்திலும் இவை பதிவாக்கப்பட்டுள்ளன.

மேலும், இலங்கையிலுள்ள 14 பல்கலைக்கழகங்களிலும், தேசிய நூலகங்கள், தேசிய ஆவணக்காப்பகம் மற்றும் சுமார் 13 நாடுகளைச் சேர்ந்த தமிழ் நூல் ஆவணக்காப்பகங்களிலும் இவற்றை ஆவணப்படுத்தி வருகின்றார். இன்னும் இம்முயற்சியை தற்போதும் தொடர்ந்து கொண்டிருக்கின்றார். தற்போது இலங்கையிலிருந்து வெளிவரும் முன்னணி பத்திரிகைகளில் ஒன்றானஞாயிறுதினக்குரலில்இவர்கள் நம்மவர்கள்எனும் தலைப்பில் இந்த கட்டுரைத் தொடர் பிரசுரமாகி வருகின்றது. இறைவன் நாடுமிடத்து தனது ஆயட்காலத்துக்குள் குறைந்தபட்சம் 1000 ‘இலங்கை எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்கள், கலைஞர்கள்விபரங்களையாவது திரட்டி ஆவணப்படுத்த வேண்டும் என்பதே இவரின் இலட்சியமாகும். இந்த அடிப்படையில் தற்போது இப்பணியிலேயே தன்னை முழுமையாக அர்ப்பணித்துள்ளார்.

இலங்கை எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்கள், கலைஞர்கள் விபரத்திரட்டுஎனும் தலைப்பில் இவரது 14 தொகுதிகளிலும் இலங்கையைச் சேர்ந்த 325 எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்கள், கலைஞர்கள் விபரங்களும், புலம்பெயர் நாடுகளைச் சேர்ந்த 44 எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்கள், கலைஞர்களின் விபரங்களும் பதிவாக்கப் பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

புன்னியாமீன் அவர்களினால் எழுதப்பட்டுள்ள முதல் 110 நூல்களும் ஐக்கிய இராச்சியத்திலிருந்து திரு. என். செல்வராஜா அவர்களால் தொகுத்து வெளியிட்டுவரும் ஈழத்துத் தமிழ் நூல்களின் சர்வதேச ஆவணக் களஞ்சியமானநூல் தேட்டத்தில்பதிவாக்கப்பட்டுள்ளன. அந்த 110 நூல்களினதும் பதிவினைத் தொகுத்து திரு. செல்வராஜாநூல்தேட்டத்தில் கலாபூஷணம் புன்னியாமீன்எனும் நூலினை எழுதியிருந்தார். நூல்தேட்டம் துணை நூல்வரிசை 01 ஆக இந்நூல் 2007 மார்ச்சில் வெளிவந்தது.

இவரின் எழுத்துத்துறையைப் போலவே வெளியீட்டுத்துறையும் முக்கியத்துவம் பெறுகின்றது. 1987.11.11 இல் இவரின் வெளியீட்டு அமைப்பானசிந்தனைவட்டம்உருவாக்கம் பெற்றது. 1988 ஜனவரியில்பிரித்தானியா அரசாங்க முறைஎனும் புத்தகத்தை வெளியிட்ட சிந்தனைவட்டம் இதுவரை (2008 டிசம்பர்) 300 புத்தகங்களை வெளியிட்டுள்ளது. சிந்தனைவட்டத்தின் 300ஆவது வெளியீடு இவரின்இவர்கள் நம்மவர்கள் பாகம் - 4’ ஆகும்.

இலங்கையைப் பொறுத்தமட்டில் தமிழ் நூல் வெளியீடு என்பது ஒரு கடினமான பணியாகும். இந்தியாவைப் போல வெளியீட்டகங்கள் வெளியிடக்கூடிய நூல்களின் குறிப்பிட்ட பிரதிகளை நூலக சபைகளோ, அரசோ கொள்வனவு செய்யக்கூடிய எவ்வித சிறப்பு ஏற்பாடுகளும் அங்கில்லை. எனவே, இலங்கையில் எழுத்தாளனே வெளியீட்டாளனாகவும் செயற்படக்கூடிய ஒரு துர்ப்பாக்கியமான நிலை காணப்படுகின்றது. இந்த அடிப்படையில் புன்னியாமீனின் விடாமுயற்சியினால் இதுவரை 300 நூல்களை வெளியிட்டுள்ளமை ஒரு சாதனை என்றே குறிப்பிட வேண்டும். சிந்தனைவட்டத்தால் வெளியிடப்பட்ட 275 நூல்களின் பதிவுகளை திரு. என்.செல்வராஜாநூல்தேட்டத்தில் சிந்தனைவட்டம்எனும் பெயரில் நூல்தேட்டம் துணை நூல் வரிசை இலக்கம் 02ஆக 2007 நவம்பரில் வெளியிட்டிருந்தார். இந்நூலில் சிந்தனைட்டத்தால் வெளியிடப்பட்ட 275 நூல்களும் நூலியல் பகுப்பாக்கத்துக்கமைய தொகுக்கப்பட்டிருந்ததுடன், புத்தகங்களின் முகப்பட்டைப் புகைப்படங்களும் இணைக்கப்பட்டிருந்தன.

வளர்ந்த எழுத்தாளர்களைவிட வளர்ந்துவரும் எழுத்தாளர்களின் நூல்களை சிந்தனைவட்டத்தின் மூலமாக வெளியிட்டு ஒரு புதிய எழுத்தாளர் தலைமுறையை உருவாக்குவதில் புன்னியாமீன் அதிகளவில் ஆர்வம் காட்டி வருவதை காணமுடிகின்றது. இந்த அடிப்படையில் சிந்தனைவட்டத்தின் மூலமாக அறிமுகப்படுத்தப்பட்ட பல எழுத்தாளர்கள் இன்று இலங்கையில் புகழ்பெற்று விளங்குவதையும் காணக்கூடியதாக இருக்கின்றது.

அதேநேரம், தனது சிந்தனைவட்ட வெளியீட்டகத்தின் மூலமாக தேசிய ரீதியிலும்ää சர்வதேச ரீதியிலும் புகழ்பெற்று விளங்கும் மூத்த எழுத்தாளர்களையும், கலைஞர்களையும், ஊடகவியலாளர்களையும் இனங்கண்டு மிகவும் சிறப்பான முறையில் விருது வழங்கி கௌரவித்து வருகின்றமையும் இவரின் விசேடத்துவமான பண்புகளில் ஒன்றாகக் குறிப்பிடலாம். சிந்தனைவட்டத்தின் 100வது புத்தக வெளியீடு 2000 நவம்பர் 11ஆம் திகதி கண்டி சிடிமிஷன் மண்டபத்தில் மிகப் பிரமாண்டமான முறையில் நடைபெற்றது. இவ்வைபவத்தில் இலங்கையில் மூத்த வானொலி அறிவிப்பாளர் திருமதி இராஜேஸ்வரி சண்முகம், இலங்கையில் மூத்த எழுத்தாளரும், ‘மல்லிகைசஞ்சிகையின் ஆசிரியருமான டொமினிக் ஜீவா, இலங்கையில் மற்றுமொரு மூத்த எழுத்தாளரும், ஆய்வாளரும், கல்விமானும், பன்னூலாசிரியருமான எஸ்.எச்.எம். ஜெமீல், இலங்கையில் தமிழிலக்கியக் காவலரும், பூபாலசிங்க புத்தகநிலைய உரிமையாளருமான ஸ்ரீதரன்சிங் ஆகியோர் கௌரவிக்கப்பட்டனர்.

2004 செப்டம்பர் 11ஆந் திகதி சிந்தனைவட்டத்தின் 200வது நூல் வெளியீட்டுவிழா நடைபெற்றது. இந்த விழாவில் இலங்கையில் மூத்த முஸ்லிம் பெண் எழுத்தாளர் நயீமா சித்தீக், மூத்த கவிஞரும், பன்னூலாசிரியருமான கல்ஹின்னை ஹலீம்தீன், இலங்கையில் சிரேஷ்ட நூலகவியலாளரும், தற்போது ஐக்கிய இராச்சியத்தில் வசித்து வருபவரும், பன்னூலாசிரியரும், அயோத்தி நூலக சேவைகள் ஸ்தாபகருமான திரு.என். செல்வராஜா, இலக்கிய ஆய்வளரும், இலக்கியக் காப்பகருமான என்.எல். ரசீன் ஆகியோர் கௌரவிக்கப்பட்டனர்.

சிந்தனைவட்டத்தின் 300வது நூல் வெளியீட்டுவிழா கடந்த 2008 டிசம்பர் 28ஆந் திகதி வத்தேகெதர முஸ்லிம் மகாவித்தியாலய கேட்போர் கூடத்தில் வெகு விமரிசையாக நடைபெற்றது. இவ்விழாவில் முதுபெரும் எழுத்தாளரும், பன்னூலாசிரியருமான அன்புமணி, மூத்த கவிஞர் ஏறாவூர் அனலக்தர், இலங்கையில் தமிழ் சிங்கள இலக்கிய உறவுக்கு பாலமமைத்துவரும் சிரேஷ்ட மொழிபெயர்ப்பாளரும் 52 நூல்களை எழுதியுள்ள சிங்கள நூலாசிரியருமான மடுளுகிரிய விஜயரத்ன, மூத்த எழுத்தாளரும், பன்னூலாசிரியரும், ஞானம் சஞ்சிகையின் ஆசிரியருமான டாக்டர் ஞானசேகரன், மூத்த தமிழ் இலக்கியக் காவலரும், ஆசிரியருமான . ஹாஜிதீன் ஆகியோர் கௌரவிக்கப்பட்டனர். அதேநேரம், 2003ஆம் ஆண்டு சிந்தனைவட்டத்தின்நிழல்களின் நிஜம்கவிதை நூல் வெளியீட்டுவிழாவில் இலங்கையின் சிரேஷ்ட வானொலி அறிவிப்பாளரும், சர்வதேச புகழ் தமிழ் அறிவிப்பாளருமான பி.எச். அப்துல் ஹமீத் கௌரவிக்கப்பட்டார்.

புன்னியாமீன் 1979ஆம் ஆண்டுவிடிவுஎனும் இலக்கிய சஞ்சிகையையும், 1980களில்அல்ஹிலால்எனும் பத்திரிகையையும் ஆசிரியராகவிருந்து நடத்திவந்தார். இலங்கையில் தேசிய பத்திரிகைகளில் நிருபராக பணியாற்றியுள்ளார். தற்போது ஐக்கிய இராச்சியத்திலிருந்து வெளிவரும்உதயன்’, ‘லண்டன் குரல்ஆகிய பத்திரிகைகளிலும், ‘தேசம்சஞ்சிகையினதும் இலங்கைச் செய்தியாளராகப் பணியாற்றி வரும் அதேநேரத்தில் ஐக்கிய இராச்சியத்தைத் தளமாகக் கொண்டியங்கும் முன்னணி இணையத்தளமொன்றின் செய்தியாசிரியராகவும் பணியாற்றுகின்றார்.

இவரது பல இலக்கிய பேட்டிகள் இலங்கையில்தொலைக்காட்சி, பிரித்தானியாவில்தீபம்தொலைக்காட்சி, பிரித்தானியாவின் சர்வதேச ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் ‘(.பி.ஸி.) வானொலி’, ‘லண்டன் தமிழ் வானொலி’, ஜெர்மனியில்ஐரோப்பிய தமிழ் வானொலிஆகியவற்றில் நேரடி ஒளி ஃஒலிபரப்பாக இடம்பெற்றுள்ளன.

இவரின் இத்துறை சாதனைகளுக்காக மத்திய மாகாண இந்து கலாசார அமைச்சு 1995ஆம் ஆண்டுக்கான மத்திய மாகாண சாகித்திய விழாவில் பொற்கிழியும், விருதும் வழங்கி கௌரவித்தது. மேலும், மக்கள் கலையிலக்கிய ஒன்றியம் கண்டியில் நடாத்திய இலக்கிய விழாவொன்றில் பேராசிரியர் துரைமனோகரன், பேராசிரியர் . அருணாசலம், பேராசிரியர் அம்பலவாணன் சிவராசா ஆகியோர் முன்னிலையில் அப்போதைய பேராதனைப் பலக்லைக்கழக தமிழ்த்துறைத் தலைவர் பேராசிரியர் தில்லைநாதன் அவர்களினால் பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப்பட்டார். மேலும், இரத்தின தீப விருது இவருக்கு இரு தடவைகள் வழங்கப்பட்டுள்ளன.

ஸ்ரீலங்கா அரசு கலைஞர்களுக்கும்ää இலக்கியவாதிகளுக்கும் வழங்கும் அதி உயர் விருதானகலாபூஷணம்விருதினை 2004ஆம் ஆண்டு இவருக்கு வழங்கியது. இலங்கையில்கலாபூஷணம்விருது 60 வயதுக்கு மேற்பட்டோருக்கே வழங்கப்படுவதுண்டு. இலங்கையில் அரசால் வழங்கப்படும் இவ்வுயரிய விருதை 100 புத்தகங்கள் எழுதியமைக்கா புன்னியாமீனுக்கு சிறப்பு அனுமதிப்படி 44ஆம் வயதிலே வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும். இதுவரை கலாபூஷணம் விருது பெற்றுள்ள வயதில் குறைந்தவரும் இவரே. அதேநேரம்ää பல்வேறுபட்ட பிரதேச இலக்கிய விழாக்களில் விருதுகள், பட்டங்கள் வழங்கப்பட்டு இவர் கௌரவிக்கப்பட்டுள்ளார்.

மேலும், இவரின் இலக்கிய சேவையைக் கருத்திற்கொண்டு கிழக்கிலங்கையிலிருந்து வெளிவரும்தடாகம்எனும் இலக்கியச் சஞ்சிகை 1999 நவம்பர் - டிசம்பர் இதழில் இவரின் புகைப்படத்தை முகப்பட்டையில் பிரசுரித்து கௌரவித்தது. அதேநேரம்ää இலங்கையிலிருந்து நான்கு தசாப்த காலங்களுக்கும் மேலாக வெளிவரும் தரமான இலக்கிய சஞ்சிகையானமல்லிகை’ 2005 மார்ச் இதழிலும், மற்றொரு தரமான இலக்கிய சஞ்சிகையானஞானம்தனது 102வது (2008 நவம்பர்) இதழிலும் இவரின் புகைப்படத்தை முகப்பட்டையில் பிரசுரித்து கௌரவித்துள்ளன. மேலும்ää கிழக்கிலங்கையிலிருந்து வெளிவரும்சமாதானம்இலக்கிய சஞ்சிகையின் 2007 அக்டோபர் இதழும், இந்தியாவிலிருந்து வெளிவரும்ஏழைதாசன்’ (இதழ் எண்:159) 2008 மே இதழும் இவரின் புகைப்படத்தை அட்டைப்படத்தில் தாங்கிவந்தன.

தன்னுடைய இலக்கிய ஈடுபாட்டுக்கு அடிப்படை வழங்கிய தனது அன்புப் பெற்றோரையும், ஆசான்களான திருவாளர்கள் யோ. பேனடிக்பாலன், . ஹாஜிதீன் ஆகியோரையும் அன்புடன் நினைவுகூர்ந்து வரும் இவரின் அன்புப் பாரியார் எம்.எச்.எஸ். மஸீதா ஆவார். இவர் தென்னிலங்கையின் காலியைப் பிறப்பிடமாகக் கொண்டவர். இவரும் ஒரு கவிஞரும், எழுத்தாளருமாவார். புன்னியாமீனின் எழுத்துத்துறை மற்றும் வெளியீட்டுத்துறை செயற்பாடுகளுக்கு இவரின் பாரியார் பக்கபலமாக இருந்து வருகிறார். புன்னியாமீனுடன் இணைந்து பல நூல்களை இவர் எழுதியுள்ளார். இவரால் எழுதப்பட்ட சிறுகதைத் தொகுதிமூடுதிரைஎன்பதாகும். புன்னியாமீன் - மஸீதா தம்பதியினருக்கு சஜீர் அஹமட், பாத்திமா சம்ஹா ஆகிய இரண்டு அன்புச் செல்வங்களுளர்.

கருத்துகள் இல்லை: