கலைத் தமிழ் வலைப்பூவுக்கு வருகை தந்தமைக்கு நன்றி! -மதுராப்புர கலைமகன் பைரூஸ்

ஞாயிறு, 25 நவம்பர், 2012

ஈழத்துப் போர்க்காலச் சிறப்பிதழ் ஞானம் 150ஆவது இதழ் வெளியீடு

கொழும்பு தமிழ்ச்சங்கத்தில் இன்று வைபவம் 
ஞானம் 150ஆவது இதழ் - ஈழத்துப்போர் இலக்கியச் சிறப்பிதழ் இன்று 25.11.2012 ஞாயிறு மாலை 5.00 மணிக்கு கொழும்புத் தமிழ்ச் சங்கத்தில் ஞானம் 150ஆவது இதழ் ஈழத்துப் போர்க்காலச் சிறப்பிதழாக மலர்கிறது.
இவ்விதழ் 600 பக்கங்களில் வெளிவந்திருப்பது சிற்றிதழ் வரலாற்றில் முன்னெப்பொழுதும் இடம்பெறாத ஒரு பாரிய முயற்சியாக அமைகிறது. நமது நாட்டில் இடம்பெற்ற மூன்று தசாப்தகால ஆயுதப் போரின் பின்னணியாக எழுந்த இலக்கியங்களின் ஒரு வெட்டு முகத்தை இச்சிறப்பிதழ் தருகிறது.
இவ்விதழில் 42 கட்டுரைகள் அடங்கியுள்ளன. போர் இலக்கியம் என்றால் என்ன? போர் இலக்கியம் பற்றிய உலகப் பரிமாணம், மற்றும் நமது நாட்டில் வெளிவந்த போர் இலக்கியங்கள், அவற்றின் அரசியற் பின்னணி முதலியவற்றை வெளிக்கொணரும் ஒரு கருத்தாடல் இந்த இதழில் வெளியாகியிருப்பது போர் இலக்கியம் பற்றி வாசகர்களுக்கு ஒரு தெளிவைக் கொடுப்பதாக அமைகிறது.
போர்க்காலத்தில் வெளிவந்த உன்னத ஆக்க இலக்கியப் படைப்புகள் என விமர்சகர்களால் கணிக்கப்பட்ட 23 சிறுகதைகள், 43 கவிதைகள் இச்சிறப்பிதழில் மீள்பிரசுரம் செய்யப்பட்டுள்ளன.
வடக்கில் - யாழ்ப்பாணம், மன்னார், வன்னிப் பிரதேசங்களில் போர் ஏற்படுத்திய தாக்கங்கள், கிழக்கில் - திருகோணமலை, அம்பாறை, மட்டக்களப்பில் போர் ஏற்படுத்திய வலிகள், மேற்கில் - கொழும்புவாழ் தமிழ்பேசும் மக்கள் சந்தித்த இனத்துவேச நெருக்கடிகள், தெற்கில் சிங்களவர்கள் போரினைப் பார்த்த பார்வைகள், மத்திய இலங்கையில் - மலையகத்தில் போர் ஏற்படுத்திய அதிர்வுகள் என இலங்கை பூராவும் எழுந்த போரின் பிரதிபலிப்புகள் அடங்கிய ஆக்கங்களை இந்தச் சிறப்பிதழ் தாங்கிவந்துள்ளது.
இந்த நூல் வெளியீட்டு விழாவின் சிறப்பம்சமாகப் பின்வரும் பிரமுகர்கள் பாராட்டி கெளரவிக்கப்படுகிறார்கள்.
ஜின்னாஹ் ஷரிப்புதீன்
கிழக்கிலங்கை மருதமுனையைப் பிறப்பிமாகக் கொண்டவர். புலவர்மணி ஆ.மு.ஷரிபுத்தீனின் புத்திரர். பத்திரிகைத்துறை ஜாம்பவான் எஸ்.டி.சிவநாயகம் அவர்களால் இலக்கிய உலகுக்கு அறிமுகமானவர்.
காவியம், கவிதை, சிறுகதை, புதினம், சிறுவர் இலக்கியம், கட்டுரை மொழிமாற்றம் (கவிதை) என்னும் துறைகளில் கணிசமான பங்களிப்புக்களைச் செய்துள்ள இவர், ஒன்பது காவியங்கள் அடங்கலாகப் பத்தாயிரத்துக்கு அதிகமான மரபுசார் கவிதைகளை இயற்றியுள்ளார். அத்தோடு பல்துறை சார்ந்த இருபத்து நான்கு நூல்களையும் வெளியிட்டுள்ளார்.
இலக்கியப் புரவலர் ஹாசிம் உமர்
இந்தியாவின் குஜராத் மாநிலத்தில் குத்தியானா பிரதேசத்தில் உள்ள பாட்வியா நகரைப் பிறப்பிடமாகக் கொண்டவர் புரவலர் அல்ஹாஜ் ஹாஷிம் உமர். இலங்கைக்குப் புலம்பெயர்ந்த அவரது பெற்றோர் ஆரம்பத்தில் கேகாலையில்தான் வாழ்ந்தனர். ஆரம்பக் கல்வியை அவர் அங்கு சென் மேரிஸ் கல்லூரியில் பெற்றார்.
உழைப்பின்மீது மிக்க நம்பிக்கை கொண்ட தொழிலதிபரான இவர், 1984 தொடக்கம் புடவை ஆலைச் சொந்தக்காரராக பொருZட்டி வருகின்றார். மாத்தளை மாவட்டத்தில் முதன்முதலாகத் தொடங்கிய இத்தொழில் பின்னர் கெக்கிராவ, தம்புள்ள, உக்குவல, ஹட்டன் ஆகிய பிரதேசங்களில் பல ஆலைகள் உருவாகி விரிவடைந்து ஆயிரத்துக்கு அதிகமானோர் இவ்வாலைகளில் தொழில்புரிகின்றனர்.
எழுத்தாளர்களுக்கு உதவிக்கரம் நீட்டும் புரவலர், இதுவரை ஐந்நூற்றுக்கும் அதிகமான முதற் பிரதிகளைக் கணிசமான பணத்தொகை கொடுத்துப் பெற்றுச் சாதனை படைத்தவர்.
மிருதங்கவித்துவான் க.சுவாமிநாதன் சர்மா
மிருதங்க வித்துவான்கள் பரம்பரையைச் சேர்ந்தவர் மிருதங்கக் கலைஞர் வித்துவான் க.சுவாமிநாத சர்மா. இவரது பாட்டனார் புகழ்பெற்ற வட்டுக்கோட்டை நாவன்னா ஐயர் பரம்பரையில் வந்த கலாவிற்பன்னர் அனந்த சுப்ரமணிய சர்மா ஆவார். இவர் கோவில் பூசகராக இருந்து தெய்வத் தொண்டு ஆற்றிய அதேவேளை, ஆயுர்வேத வைத்தியராகவும் கலாவித்தகராகவும் திகழ்ந்தவர். தந்தை வழியில் தானும் ஒரு மிருதங்க வித்துவானாகத் திகழ்ந்தவர். இவரது தந்தை கலாபூஷணம் பிரம்மஸ்ரீ அ.கணேசசர்மா.
ஆசை இராசையா
இலங்கையின் வடபுலத்தைப் பிறப்பிடமாகக் கொண்ட ஓவியர் ஆசை இராசையா, இலங்கையின் முதல்தர ஓவியர்களில் ஒருவர். தனது ஆற்றல்மிகு படைப்புக்களால் உலகளவில் புழக்கொண்டவர்.
கொழும்பு, பலாலி ஆசிரிய பயிற்சிக் கல்லூரிகளில் விசேட பயிற்சி பெற்ற இவர், இலங்கை நுண்கலைக் கல்லூரியில் தனது ஓவியப் பின்படிப்பைத் தொடர்ந்தவர். கொழும்பு றோயல் கல்லூரியில் நீண்டகால ஓவிய ஆசிரியராகக் கடமையாற்றி, 1983 இனக்கலவரத்தின்பின் தொழிலை இழந்தார்.
இலங்கை முத்திரைப் பணியகத்தின் ஓவியர் குழாத்தின் உறுப்பினரான ஆசை இராசையா, சேர். பொன்னம்பலம் இராமநாதன், சேர்.பொன்னம்பலம் அருணாச்சலம், சேர்.ஜோன் கொத்தலாவல, சேர். வைத்தியலிங்கம் துரைசாமி, டாக்டர்.ஈ.பி.மலலசேகரா, சேர்.ஜோர்ஜ். ஈ.டி.சில்வா ஆகியோரின் உருவங்களை முத்திரை ஓவியங்களாக வரைந்தளித்துப் புகழ்பெற்றவர். அது மாத்திரமன்றி இலங்கையின் முதலாவது புகையிரதத்தின் மாதிரி ஓவியத்தையும், தவளம் என்னும் புகழ்பெற்ற ஓவியத்தையும் வரைந்தவர்.
(கொழும்பு கிழக்கு தினகரன் நிருபர்)
நன்றி: தினகரன் வாரமஞ்சரி